திருவாலங்காடு : திருவாலங்காடு ஒன்றிய அலுவலகத்தில், கவுன்சிலர்கள் கூட்டம், சேர்மன் ஜீவா தலைமையில் நேற்று நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் வரவேற்றார். கூட்டத்தில், வரவு - செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டது.பின், 65 லட்சம் ரூபாய் மதிப்பில், சின்னமண்டலி, பாகசாலை, ஒரத்துார், லட்சுமி விலாசபுரம், கனகம்மாசத்திரம், சிவாடா, என்.என்.கண்டிகை, நல்லாட்டூர், களாம்பாக்கம், வீரராகவபுரம் ஆகிய ஊராட்சிகளில், உயர் கோபுர மின் விளக்குகள் மற்றும் சிமென்ட் சாலைகள் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், பா.ஜ., ஒன்றிய கவுன்சிலர் கவுசல்யா, கொசஸ்தலை ஆற்றில் இருந்து ஆற்காடு ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், பருவ மழை பெய்தும், அனைத்து ஏரிகள் நிரம்பியும், ஆற்காடு ஏரி வறண்டு இருக்கிறது.நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என, புகார் தெரிவித்து மனு கொடுத்தார். ஒன்றிய சேர்மன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.