கும்மிடிப்பூண்டி : தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் ரயில்வே மேம்பாலத்தின் இறக்கத்தில், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ள, சிமென்ட் பலகையை அகற்ற வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கும்மிடிப்பூண்டி, கன்னியம்மன் கோவில் பகுதியில், நகர் பகுதியை இணைக்கும் ரயில்வே மேம்பாலம் உள்ளது. சென்னை - - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையுடன், அந்த மேம்பாலம் இணையும் பகுதியில், மழைநீர் வடிகால்வாய் தொட்டி ஒன்று உள்ளது.அதை, ஒரு பெரிய சிமென்ட் பலகை கொண்டு, தேசிய நெடுஞ்சாலை துறையினர் மூடி உள்ளனர்.கும்மிடிப்பூண்டி நகரில் இருந்து, அந்த மேம்பாலம் வழியாக, தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடக்கும் போது, திக்கு முக்காடி போகின்றனர்.
மேம்பால இறக்கத்தில், குறிப்பாக இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு, மேற்கண்ட சிமென்ட் பலகை, பலி பீடம் போல் காட்சியளிக்கிறது. பலர் விபத்தை சந்திக்க நேரிடுகிறது.மேலும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, அப்பகுதியில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.