பொன்னேரி : குற்ற சம்பவங்களை தடுக்கவும், சாலை விதிகளை மீறுபவர்களை கண்காணிக்கவும் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்து இருக்கின்றன.
பொன்னேரி காவல் நிலையம் சார்பில், பழைய பேருந்து நிலையம், தேரடி சாலை சந்திப்பு, சின்னகாவணம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிய, சாலை விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, விபத்துக்களுக்கான காரணங்கள் விசாரிக்க என, பல்வேறு வகைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பயன்படும் வகையில் பொருத்தப்பட்டன.
எந்த நோக்கத்திற்காக, இவை பொருத்தப்பட்டதோ, அதற்கு பயன்படாத வகையில், தற்போது செயலிழந்து இருக்கின்றன.சமீபத்தில், சின்னகாவணம் பகுதியில் நடந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி சென்ற திசையை அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டது.
பல லட்சம் ரூபாய் செலவிட்டு, கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில், அதை முறையாக பராமரிக்காமல் வைத்துள்ளது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.மேற்கண்ட இடங்களில் செயலிழந்து இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.