சென்னை : கிருஷ்ணா நீர்வரத்து தொடரும் நிலையில், அதை சேமிப்பதற்கு வசதியில்லாததால் பொதுப்பணித்துறையினர் திணறி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது.இதில், 3.30 டி.எம்.சி., கொள்ளளவு உடைய புழல் ஏரியில், தற்போது 3.24 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு, வினாடிக்கு, 134 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில், அதே அளவு நீர், சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. அதில், தற்போது, 0.88 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவு உடையது.அதில், 3.34 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு, வினாடிக்கு, 280 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக, வினாடிக்கு, 127 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பூண்டி ஏரி, 3.23 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. அதில், தற்போது, 3.15 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.ஏரிக்கு, வினாடிக்கு, 691 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில், அதில் இருந்து, வினாடிக்கு, 537 கன அடி நீர், இணைப்பு கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட தேர்வாய் கண்டிகை ஏரி, 0.50 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. அதில், தற்போது, 0.47 டி.எம்.சி., இருப்புஉள்ளது.
கால்வாய் வழியாக, வினாடிக்கு, 75 கன அடி கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு, 11.7 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட, ஐந்து ஏரிகளிலும் சேர்த்து, 11.1 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து, கிருஷ்ணா நீர் தொடர்ந்து தமிழகத்திற்கு வருகிறது.நேற்று, வினாடிக்கு, 791 கன அடி நீர், ஊத்துக்கோட்டை, ஜீரோ பாயிண்ட் எல்லைக்குவந்தது.
நடப்பு நீர் வழங்கும் தவணை காலத்தில், 6.28 கிருஷ்ணா நீரை, ஆந்திர அரசு வழங்கியுள்ளது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஐந்து ஏரிகளும் முழுக்கொள்ளளவை நெருங்கியுள்ள நிலையில், தொடர்ந்து வரும் கிருஷ்ணா நீரை சேமிப்பதற்கு வசதியில்லாததால், பொதுப்பணித்துறையினர் திணறி வருகின்றனர்.