பேரூர்:பருவம் தவறிய மழையால், பயிர்கள் கடுமையாக பாதித்துள்ள நிலையில், மீண்டும் மழை பெய்யத் துவங்கியுள்ளது,விவசாயிகளைபீதி அடைய செய்துள்ளது.கோவை மாவட்டம்முழுவதும் பருவம் தவறி பெய்த தொடர் மழையால், விவசாய பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.தொண்டாமுத்துார் வட்டாரத்தில், பல நுாறு ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல், மக்காச்சோளம், பருத்தி, பச்சைப்பயிறு, உளுந்து, கொள்ளு உள்ளிட்ட பயிர்கள் முளைத்து வீணாகின.சில நாட்களாக மழைஇடைவெளி விட்டதையடுத்து, எஞ்சியவற்றை அறுவடை செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டினர். ஈரப்பதம் நிறைந்த நெல் வயல்களில் இயந்திரங்களால் அறுவடை செய்ய முடியாத நிலையால், கூலியாட்களை கொண்டு அறுவடை நடந்தது.முளைத்திருந்த மக்காச்சோளம், பருத்தி, உளுந்து உள்ளிட்ட பயிர்களை, பிரித்தெடுக்கும் பணிகள் நடந்தன. இந்நிலையில், தொண்டாமுத்துார் வட்டாரம் முழுதும், நேற்று காலை, 8:00 மணியளவில் பெய்யத் துவங்கிய மழை, 11:30 மணி வரை பெய்தது.மீண்டும் மழை பெய்யத் துவங்கியுள்ளது, வானம் மேக மூட்டமாக காணப்படுவது, விவசாயிகளை பீதியடைய செய்துள்ளது. தொண்டாமுத்துார் வட்டாரம் முழுவதும் விரைந்து ஆய்வு செய்து, பெரும் துயரத்தில் உள்ள விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.'மழை தொடர வாய்ப்பில்லை'தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆய்வு மையத்தலைவர் ராமநாதன் கூறுகையில், ''குறைந்த தாழ்வழுத்த நிலை காரணமாக மழை பெய்துள்ளது. மழை தொடர இனி வாய்ப்புகள் இல்லை. பருவமழை முற்றுப்பெற்று விட்டது. இது கடல் பகுதியில் ஏற்படும் தாழ்வழுத்த நிலை மற்றும் வெப்ப சலனம் ஆகியவற்றால், இப்படி சில நேரங்களில் மழை பெய்கிறது. அவ்வளவு தான்,'' என்றார்.