புதுச்சேரி: புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க கோரி, நர்சிங் கல்லுாரி மாணவர்கள் பல்கலைக் கழக வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால், பள்ளி கல்லுாரிகள் திறந்து வகுப்புகள் நடக்கின்றன. செவிலியர் கல்லுாரி மாணவர்களுக்கு அடுத்த வாரம் துவங்கும் செமஸ்டர் தேர்வு வழக்கமான முறையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.கொரோனா காரணமாக வகுப்புகள் சரிவர நடக்காததால் இந்த முறை செமஸ்டர் தேர்வுகளையும், புத்தகங்களை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க கோரி, நர்சிங் கல்லுாரி மாணவர்கள், பல்கலைக் கழக முதலாவது நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாணவர் காங்., ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டது.மாணவ பிரதிநிதிகளுடன் பல்கலை நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியது. தற்சமயம் தேர்வு தள்ளி வைக்க, கல்லுாரிகளில் கடிதம் அளிக்க கூறினர். புத்தகம் பார்த்து எழுதுவது தொடர்பாக, ஆலோசனைக்கு பின்பு அறிவிப்பதாக தெரிவித்தனர்.