கோவை:கோவை மருதமலை முருகன் கோவிலில் வரும், 28ம் தேதி தைப்பூசத்திருவிழா நடைபெறவுள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுக்கும் வகையில் முன்னேற்பாடு ஆய்வு கூட்டம், கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடந்தது.கோவில் நிர்வாகம், மாநகராட்சி, காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கோவில் திருக்கல்யாண உற்சவம், திருவீதி உலாவின் போது காலை, 4:30 முதல் 7:00 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை. காலை, 7:00 மணி முதல் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவர்.27,28,29,30 ஆகிய தேதிகளில் தைப்பூசத்திருவிழா நாட்களில், காவடி, பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வளாகத்தில் இரவு தங்கவும் அனுமதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டது.கலெக்டர் ராஜாமணி கூறுகையில், ''தைப்பூசத்திருவிழாவிற்கு, 65 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்டோர் வருவதை தவிர்க்க வேண்டும். முககவசம் அணியாமல் வருபவர்களுக்கும், சமூக இடைவெளி பின்பற்றாதவர்களுக்கும், அனுமதி கிடையாது.28, 29ல் மலைப்பாதையில் கோவிலுக்கு செல்ல, இருசக்கர வாகனங்கள் உட்பட தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை. 28ல் கோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். போக்குவரத்து கழகம் மூலம் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.அன்னதானம் செய்ய விரும்புவோர், உணவு பாதுகாப்புதுறையின் முன் அனுமதி பெற்று, மலை அடிவாரத்தில் அன்னதானம் செய்யலாம். அனைத்து கோவில்களிலும் தேர்வலம் வருதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.