கூடலுார்:முதுமலையில், காட்டு யானையின் காதில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இருவரை, வனத்துறையினர் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனப்பகுதியில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக, காட்டு யானை சுற்றி வந்தது. வனத்துறையினர், பழத்தில் மாத்திரை வைத்து, உட்கொள்ள செய்து, சிகிச்சை அளித்து வந்தனர்.கடந்த, 18ம் தேதி காது அறுந்த நிலையில், அந்த யானை சிங்காரா அருகே சுற்றி வந்தது. காதில் இருந்து அதிக ரத்தம் வெளியானது. 19ம் தேதி, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்தனர்.
லாரியில் ஏற்றி தெப்பக்காடு செல்லும் வழியில், யானை பரிதாபமாக உயிரிழந்தது.அதன் காதில் தீக்காயங்கள் ஏற்படுத்தியவர்கள் குறித்து, வனத்துறை தனிக்குழு விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், யானைக்கு தீ வைத்த வீடியோ, நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில், யானையை சிலர் பெட்ரோல் ஊற்றிய தீப்பந்தத்தை வீசி விரட்டியதும், காது, கழுத்து பகுதியில் எரியும் தீயுடன், யானை அலறி ஓடுவதும் பதிவாகியுள்ளது.இதை வைத்து, விசாரித்த வனத்துறையினர், மாவனல்லா தனியார் விடுதி உரிமையாளர் மல்லன் மகன், ரேமண்ட், 28, மசினகுடியைச் சேர்ந்த பிரசாத், 36, ஆகியோரை கைது செய்தனர்.
தலைமறைவான ரிக்கிராயன், 31, என்பவரை தேடி வருகின்றனர்.முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ''இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.