பொள்ளாச்சி:பி.ஏ.பி., திட்டத்தில், கோவில்பாளையம் கிளை கால்வாயில் பாசனத்துக்கு, நீர் திறப்புக்கு தாமதமாவதால், விதைப்புக்கு தயாரான விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.பி.ஏ.பி., பாசன திட்டத்தின் மூன்றாம் மண்டலத்தில், 94,500 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. நடப்பு பருவத்தில், உழுது வைத்துள்ள நிலத்தில், சோளம், மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் பயிறுகள் விதைப்புக்கு விவசாயிகள் தயாராகி உள்ளனர்.கடந்த, 15 நாட்களுக்கு முன், பி.ஏ.பி., திட்டத்தின், மூன்றாவது மண்டலத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும், கோவில்பாளையம் கிளை கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களில் தண்ணீர் திறக்கவில்லை.ஏற்கனவே, பருவம் தவறி பெய்த மழையால், ஒட்டுமொத்த காய்கறி பயிர்கள் அழுகி பெரும் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த பருவத்திலாவது விதைக்கலாம் என காத்திருந்தும், கிளை கால்வாயில் நீர் திறக்காததால், பருவம் தவறி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது, என, விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.