அங்க ஓடாதே... இங்க குதிக்காத... மண்ல விளையாடாதே... என்று, பல வீடுகளில் 'குட்டீஸ்களுக்கு' வேகத்தடை போடுவதை பார்த்திருப்போம். ஆனால்... இந்த வயசுல விளையாடுறது தான், மிகப்பெரிய ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும். குட்டீஸ்களை தாராளமா விளையாட விடுங்க... வியர்க்குற வரை. அவங்கள உங்க பார்வையிலேயே வெச்சு விளையாட்டுக்கு அனுமதி கொடுக்க என்கின்றனர், விளையாட்டு ஆர்வலர்கள். எக்காரணம் கொண்டு, தொலைக்காட்சியிலோ, மொபைல் போன், சமூக வலைதளங்களிலேயோ, அவர்களை மூழ்க விடாதீர்கள் என்று அட்வைசும் வழங்குகின்றனர்.நல்லா விளையாடுங்க... உங்க உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல; மனதுக்கும் புது தெம்பு தரும் என்று, கோட்பாட்டின் படி, கட்டணம் பெறாமல், 200க்கும் மேற்பட்ட கால்பந்து வீரர்களை உருவாகி வருகின்றனர், அன்னுார் கால்பந்து கழகத்தினர்.அன்னுாரில், பிரகாஷ், விஜயகுமார், கணேச மூர்த்தி ஆகிய மூன்று இளைஞர்கள், அன்னுார் கால்பந்து கழகத்தை, 2010ல் துவக்கினர். முதலில் ஐந்து பேருக்கு பயிற்சி அளிக்க துவங்கினர். தற்போது, எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.இவர்களில் இருவர், தனியார் மெட்ரிக்., பள்ளியில் ஆசிரியர்களாகவும், ஒருவர் தனியார் நிறுவனத்தில் அலுவலராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.பயிற்சியாளர்கள் மூவரும் கூறியதாவது:சிறுவர்கள், இளைஞர்கள், உடலுழைப்பு இல்லாமல், விளையாடும் ஆர்வமின்றி, மொபைலில் மூழ்கி, தீய பழக்கங்களுக்கு ஆளாவது சமுதாயத்தில் அதிகரித்து வருகிறது. இளைஞர்களை இதில் இருந்து மீட்டு விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தி ஊக்குவிக்க முடிவு செய்து, பயிற்சியை துவக்கினோம்.அன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பாதையில், தனியாருக்கு சொந்தமான தரிசு நிலத்தில், கால்பந்து பயிற்சி அளித்து வருகிறோம். 7 வயது தொடங்கி, 35 வயது வரையான இளைஞர்கள் இங்கு பயிற்சி பெறுகின்றனர். தினமும் காலையில் இரண்டரை மணி நேரமும் மாலையில் 2 மணி நேரமும் பயிற்சி நடக்கிறது. பயிற்சி அளிக்க எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. பயிற்சிக்கு தேவையான உபகரணங்களை, நன்கொடையாளர்கள் வழங்கி விடுகின்றனர். இதுவரை, 200 பேர் இங்கு பயிற்சி பெற்றுள்ளனர்.இங்கு பயிற்சி பெற்ற வீரர், 2019ல் தஞ்சாவூரில் நடந்த தென் தமிழக அளவிலான கால்பந்து போட்டியில், சிறந்த வீரருக்கான விருதும் பெற்றார். எங்கள் வீரர்கள், கடந்தாண்டு நவம்பரில் சேவூர் கால்பந்து கழகம் நடத்திய மூத்தோருக்கான போட்டியில் இரண்டாம் இடம் பெற்றனர்.'கோவை மாஸ்டர் கிட்ஸ் அகாடமி' நடத்திய போட்டிகளில், பயிற்சி மையத்தின் வீரர்கள் மூன்றாம் இடம் பிடித்தனர். ஈரோடு மாவட்டம், அரச்சலுாரில், 'ராஜேந்திரா கால்பந்து கழகம்' நடத்திய போட்டியில் முதலிடம் வென்றனர். புளியம்பட்டியில் கடந்த, 10ம் தேதி நடந்த மாநில அளவிலான போட்டியில், இரண்டாம் இடமும், சரவணம்பட்டியில் 'டிரீம் லைட்ஸ் அகாடமி' நடத்திய போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர்.இங்கு பயிற்சி பெற்ற பலர், மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடி பரிசு பெற்றுள்ளனர். இதனால் அதற்கு அடுத்த வகுப்பில் படிக்கும்போது, பள்ளிகளில் முழு கல்வி கட்டண சலுகை பெற்றுள்ளனர். கல்லுாரிக்கு சென்ற பலர், கால்பந்து போட்டியில் சாதித்து அதற்காக 'ஸ்போர்ட்ஸ் கோட்டா'வில் கல்விக்கட்டணம் இல்லாமலேயே படித்து வருகின்றனர்.இங்கு பயிற்சி பெற்ற மாணவன் மைக்கேல், துாத்துக்குடியில் தமிழக அரசு நடத்தி வரும் விளையாட்டு விடுதியில் சேர்ந்துள்ளார். அவர் போட்டியில் பங்கேற்பதற்கான செலவு உட்பட அனைத்தையுமே அரசு ஏற்றுள்ளது.தொடர்ச்சியாக கால்பந்து விளையாடுவதன் வாயிலாக, உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருக்க முடியும். இது, சிறந்த உடற்பயிற்சியாகும். மனம் ஒருமைப்படும். எனினும், எங்களுக்கு பயிற்சி தர மைதானம் இல்லை. தரிசு நிலத்தில் பயிற்சி அளித்து வருகிறோம். உதவ விரும்புவோர், இலவச கால்பந்து பயிற்சி அளிக்க வசதியாக, மைதானம் ஒதுக்கித் தரலாம். எங்கள் தொடர்பு எண்கள் 96002 06161, 95664 34816.இவ்வாறு, பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.