அன்னுார்;அன்னுார் தாலுகாவின் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என, நாைள அன்னுார் வரும் முதல்வரிடம் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள், 60 ஆண்டுகளாக எதிர்பார்த்த, அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள், ஓராண்டாக நடந்து வருகிறது. இது, மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், திட்டத்தில், அன்னுார், எஸ்.எஸ்.குளம், காரமடை, சூலுார், பெரிய நாயக்கன்பாளையம், பவானிசாகர் மற்றும் நம்பியூர் ஒன்றியங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் விடுபட்டுள்ளன.விடுபட்ட குளம், குட்டைகளை இரண்டாம் திட்டத்தில் சேர்க்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து, பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இத்திட்டத்துக்கு அரசு ஆணை வெளியாகவில்லை. விரைவில், அத்திக்கடவு இரண்டாம் திட்டத்துக்கு ஆணை வெளியிட்டு, நிதி ஒதுக்கி, பணியை துவக்க வேண்டும். கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலை மற்றும் அவிநாசி - மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலைக்கு மையமாக அன்னுார் உள்ளது. வாகனங்கள், குடியிருப்புகள் அதிகரித்து விட்டன. ஆனால், சாலை வசதி குறைவாக உள்ளது. எனவே, கிழக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் அல்லது சாலையை அகலப்படுத்தி, உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும், என, 25 ஆண்டுகளாக மக்கள் கோரி வருகின்றனர்.அன்னுாருக்கு மேற்கே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், புறவழிச்சாலை அமைக்க கற்கள் நடும் பணி நடந்து வருகிறது. ஆனால், கிழக்கு புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த நோட்டீஸ் வெளியிடப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளாகியும் முடங்கிக் கிடக்கிறது. அரசு கிழக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் அல்லது உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.போக்குவரத்து பிரச்னை அன்னுார் நகரில், முகூர்த்த நாட்களில் நிலவும் நெரிசலால், மக்கள் வேதனைக்கு ஆளாகின்றனர். நான்கு சாலைகளிலும், இரண்டு கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அன்னுாரை கடக்கவே, 15 முதல், 20 நிமிடங்கள் ஆகின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த, அரசு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியும், அந்த திட்டத்துக்கு, தேர்வு செய்யும் இடங்களில் எல்லாம் எதிர்ப்பு கிளம்புவதால், திட்டம் ஆறு ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது. அரசு உடனடியாக இடம் தேர்வு செய்து, அன்னுாரில் தினமும் சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரித்து உரம் தயாரிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டம் இல்லாததால், அன்னுாரில் குளங்கள், குட்டைகள் மற்றும் சாலையோர பள்ளங்களில் குப்பை கொட்டப்படுகிறது.தரம் உயர்த்தணும் அன்னுார் தாலுகாவாக உருவாகி, எட்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனாலும், அன்னுார் அரசு மருத்துவமனை, 48 படுக்கைகளுடன் மட்டுமே உள்ளது. அரசு மருத்துவமனையை, 100 படுக்கைகள் கொண்டதாக தரம் உயர்த்த வேண்டும். அன்னுாரில் கோர்ட் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, இடம் தேர்வு செய்யப்படாததால், கோர்ட் இல்லாமல், அன்னுார் மக்கள் மேட்டுப்பாளையம் மற்றும் கோவைக்கு செல்கின்றனர். எனவே, அன்னுாரில் விரைவில் கோர்ட் அமைக்க வேண்டும். அன்னுார் ஒன்றியத்தில் உள்ள, 21 ஊராட்சிகளிலும், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 10 முதல், 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பெரும்பாலான இடத்தில் மக்கள் போர்வெல் நீரை அருந்தி வருகின்றனர். ஊராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகம் இல்லாததால், அன்னுார் மக்கள், அவிநாசி மற்றும் மேட்டுப்பாளையம் செல்ல வேண்டியுள்ளது. இங்கு, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்.இதுபோன்ற கோரிக்கைகளை, முதல்வர் கனிவுடன் பரிசீலித்து விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்பது தான், அன்னுார் தாலுகா மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.