பெ.நா.பாளையம்;''குடியிருப்பு பகுதிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்துவதால், குற்றங்களை பெருமளவு தடுக்க முடியும். குற்றங்கள் நடந்தாலும், எளிதாக குற்றவாளிகளை அடையாளம் காண முடியும்,'' என, மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா பேசினார்.தமிழ்நாடு காவல்துறை சார்பில், குற்றங்களை தடுக்க, கிராம கண்காணிப்பு காவலர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது. நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கிராம கண்காணிப்பு காவலர் நியமனம் செய்யும் விழா நடந்தது.மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா பங்கேற்று, கிராம கண்காணிப்பு காவலர் அறிவிப்பு தொடர்பான பெயர் பலகையை திறந்து வைத்து பேசியதாவது:மக்களின் குறைகளை கேட்டறியவும், குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், கிராம கண்காணிப்பு காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். நரசிம்மநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், ராக்கிபாளையம் ஆகிய மூன்று கிராம மக்கள், இங்கு நியமனம் செய்யப்பட்டுள்ள காவலரிடம் எந்த குறை, குற்றம் நடந்தாலும் தாராளமாக தெரிவிக்கலாம்.இதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், குற்றங்கள் நடப்பதை தடுக்க, தனியார் பங்களிப்புடன், அனைத்து பகுதிகளிலும், 'சிசிடிவி' கேமராக்களை அமைக்க வேண்டும். இதனால், குற்றங்கள் நடந்தால் அதை கண்டறியவும், குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் முடியும். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.நரசிம்மநாயக்கன்பாளையம் கிராம கண்காணிப்பு காவலராக, பெரியநாயக்கன்பாளையம் காவலர் புவனேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டார். பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் பிருதிவிராஜ் வரவேற்றார். நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். எஸ்.ஐ., செல்வநாயகம் நன்றி கூறினார்.