மேட்டுப்பாளையம்:கத்தியை காட்டி மிரட்டி, பெண்ணிடம் நகை, பணத்தை அபகரித்து சென்ற மூவரை, போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம் அடுத்த மோதியபாளையத்தை சேர்ந்தவர் ராகுல் 22. இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது வீட்டில், அம்மா லலிதா மட்டும் இருந்த நிலையில், காலை 11:00 மணியளவில், கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்துள்ளார். வெளியே நின்றிருந்த மூவர், உள்ளே சென்று கதவை தாழிட்டு, கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.கையில் அணிந்திருந்த அரை பவுன் மோதிரம், பீரோவில் வைத்திருந்த, 20 ஆயிரம், 2 மொபைல் போன், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை எடுத்து கொண்டு தப்பினர். மேட்டுப்பாளையம் போலீசில் ராகுல் புகார் செய்தார்.மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் சிவகுமார், எஸ்.ஐ.,க்கள் பிரபாகரன், திலக் ஆகியோர் அடங்கிய குழுவினர் விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட மேட்டுப்பாளையம் எஸ்.எம்., நகரை சேர்ந்த சிட்டிபாபு, 35, சொக்கலிங்கம் வீதியை சேர்ந்த ராஜ்குமார், 38, கரட்டுமேடுவை சேர்ந்த அப்துல் ரகுமான், 28 ஆகியோரை கைது செய்தனர். பின், அவர்களிடம் இருந்து, பொருட்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.