தஞ்சாவூர்:அரசு பள்ளி மொட்டை மாடியில், 100க்கும் மேற்பட்ட இரும்பு பெஞ்சுகள் மழை, வெயிலில் கிடந்து வீணாகி வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கழுகப்புலிக்காடு கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. பள்ளியின் மொட்டை மாடியில், 100க்கும் மேற்பட்ட இரும்பு பெஞ்சுகள், துருப்பிடித்து வீணாகி கிடக்கின்றன.அப்பகுதி மக்கள் கூறியதாவது:அரசு பள்ளிகளுக்கு என, அரசு சார்பில், பல்வேறு நலத்திட்டங்களுக்காக அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது.
ஆனால், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளியின் தேவைக்காக வழங்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்துவது கிடையாது.கழுகப்புலிக்காடு பள்ளி மொட்டை மாடியில், மாணவர்களுக்கான பெஞ்சுகளை பயன்படுத்தாமல் போட்டு வைத்துள்ளனர். இவை, மழை, வெயிலில் பாழாகி வருகின்றன. வீணாகி போன நிலையில் உள்ள பெஞ்சுகளுடன், நல்ல நிலையில் உள்ள பெஞ்சுகளையும் துாக்கி போட்டு, புதிதாக பெஞ்சுகளை வாங்கியுள்ளனர். இதனால், மக்களின் வரிப் பணம், இப்படி வீணாகி வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.