கடலுார் : படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித்தொகை பெற, வரும் பிப்ரவரி 26க்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் செய்திக்குறிப்பு:வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், 2020ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.
உதவித்தொகை விண்ணப்பம் பெற விரும்புவோர், வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் பிப்ரவரி 26ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கணக்கு புத்தகத்துடன் சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.