செங்கல்பட்டு: செங்கல்பட்டு புறவழிச்சாலையில், லாரிகள் நேருக்கு நேர் மோதியதில், ஓட்டுனர் இறந்தார்.துாத்துக்குடியிலிருந்து புறப்பட்ட, ஒரு கன்டெய்னர் லாரி, நேற்று நள்ளிரவு, 12:30 மணிக்கு, சென்னையை நோக்கி, செங்கல்பட்டு புறவழிச்சாலையில் சென்றது.அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை தடுப்பை உடைத்து, எதிர் திசையில், சென்னை - திண்டிவனம் சாலையில் விழுந்தது.அத்தடத்தில், ஹரியானா மாநிலத்திலிருந்து, திருச்சி சென்ற லாரி, கன்டெய்னர் முன் பக்கத்தில் மோதி, அப்பளம் போல் நொறுங்கியது. மேலும், பின்னால் வந்த மற்றொரு லாரி, விபத்துக்குள்ளான லாரிகள் மீது மோதியது.இந்த விபத்தில், ஹரியானா மாநில லாரி ஓட்டுனர் சோஹைல், 23, இறந்தார். தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், அவரது சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஐந்து பேர், லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்துக்குள்ளான லாரிகளை, நேற்று காலை, 5:30 மணிக்கு, போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.