புதுச்சேரி:சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில், புதுச்சேரி காங்கிரசில் குழப்பம் துவங்கியுள்ளது. பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம், வரும் 27ம் தேதி டில்லி சென்று, பா.ஜ.,வில் இணைய உள்ளார். இது, காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென் மாநிலங்களில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்பதில், பா.ஜ., தலைமை தீவிரமாக உள்ளது. இதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு, பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய தென் மாநிலங்களில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.இதில், தமிழகம் மற்றும் கேரளாவில் கணிசமான இடங்களை கைப்பற்றுவதற்கும், சின்னஞ்சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்றுவதற்கும், பா.ஜ.,வில் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
காங்., கோட்டையாக திகழும் புதுச்சேரியில், ஆட்சியை பிடிப்பதற்கு, 'ஆப்பரேஷன் தாமரை' என்ற பெயரில், தேர்தல் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. இதற்கு முன்னோட்டமாக, முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்., ஆட்சியை கண்டித்து, தொடர் போராட்டங்களை பா.ஜ.,வினர் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், கட்சியை வலுப்படுத்தும் வகையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் என, அனைத்து தரப்பினரும் பா.ஜ.,வில் இணைக்கப்பட்டு வருகின்றனர்.
இன்னொரு பக்கம் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் போன்றவையும் பா.ஜ.,வில் வேகம் எடுத்துள்ளன.
ரகசிய பேச்சுவார்த்தை
அடுத்ததாக, காங்., கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்களுடன், பா.ஜ., தரப்பு ரகசிய பேச்சுகளை நடத்தி முடித்துள்ளது. முதல்வர் நாராயணசாமிக்கு அடுத்த இடத்தில், அமைச்சரவையில் சீனியராக உள்ள நமச்சிவாயம், பா.ஜ.,வில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அவருடன் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் சிலரும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, வரும் 31ம் தேதி புதுச்சேரி வருகிறார். அவரது முன்னிலையில், பா.ஜ.,வில் நமச்சிவாயம் இணைவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், முன்னதாகவே, பா.ஜ.,வில் ஐக்கியமாவதற்கு நமச்சிவாயம் முடிவு செய்துள்ளார்.அவர் தன் எம்.எல்.ஏ., பதவியையும், அமைச்சர் பதவியையும் நாளை ராஜினாமா செய்து, கடிதம் தருகிறார். தொடர்ந்து, காங்., கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக, கட்சி தலைமைக்கு, 'பேக்ஸ்' அனுப்புகிறார்.
வரும் 27ம் தேதி, டில்லிக்கு பறக்கும் அவர், நட்டா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைவதற்கு முடிவு செய்துள்ளார்.பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். புதுச்சேரியில், 31ம் தேதி நட்டா தலைமையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், ஆதரவாளர்களுடன் நமச்சிவாயம் பங்கேற்கிறார்.
மேற்கு வங்க பாணி
மேற்கு வங்க மாநிலமும், சட்டசபை தேர்தலை விரைவில் சந்திக்க உள்ளது. தேர்தலில் திரிணமுல் காங்., கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.இந்நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சுவேந்து அதிகாரி கடந்த மாதம் பா.ஜ.,வில் இணைந்தார். அவருடன், அக்கட்சியைச் சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏ.,க்களும் பா.ஜ.,வில் இணைந்தனர்.
திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த மேலும் பலர், பா.ஜ.,வில் இணைய வரிசை கட்டி நிற்கின்றனர். மேற்கு வங்க பாணியில், காங்., கட்சியைச் சேர்ந்த அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களை குறிவைத்து தங்கள் கட்சியில் பா.ஜ.,வினர் இணைத்து வருவது, புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், காங்., கட்சியின் அவசர செயற்குழு கூட்டம், புதுச்சேரி காங்., தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடக்கிறது.
தி.மு.க.,வுக்கு குறி
அடுத்ததாக, தி.மு.க.,வை நோக்கி தன் பார்வையை பா.ஜ., திருப்பி உள்ளது. இதனால், தி.மு.க., வட்டாரத்திலும் பரபரப்பு தொற்றியுள்ளது.