காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் சம்பா அறுவடை துவங்கிய நிலையில் நெல்லுக்கு சரியான விலை இல்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.
காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் டெல்டா பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 80 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் கடந்த மாதம் பெய்த கன மழையால் சேதமடைந்தன. அறுவடைக்குத் தயாரான வயல்கள் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் அறுவடை தாமதமாகியது. தற்போது ஆட்கள் பற்றாக்குறையால் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.டெல்டாவில் எய்யலுார், ஆயங்குடி, மோவூர், முட்டம் உள்ளிட்ட கிராமங்களில் சில நாட்களாக அறுவடை பணி துவங்கி நடக்கிறது.
மழையால் ஏக்கருக்கு 70 சதவீதம் அளவில் குறைந்து 15 முதல் 20 மூட்டை அளவில் தான் மகசூல் கிடைக்கிறது என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.சம்பா பருவ நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கவில்லை. இதனால் தனியார் வியாபாரிகள் தங்கள் இஷ்டம் போல் விலை வைத்து கொள்முதல் செய்கின்றனர்.சராசரியாக அரசு நெல் ஒரு கிலோ 18.50 ரூபாய் வீதம் குவிண்டல் 1,868 ரூபாய்க்கு குறைவில்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.
அரசு அறிவித்த விலையில் 60 கிலோ மூட்டை 1,121 ரூபாய்க்கு குறைவில்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால் தற்போது விவசாயிகளிடம் இருந்து 900 ரூபாய் முதல் 950 ரூபாய் அளவில் தான் கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். நெல்லுக்கு சரியான விலை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.