ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் குறுவட்ட கிராமங்களில் மழையால் சேதமடைந்த பயிர்களை மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையினால், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் பல ெஹக்டேர் பரப்பளவிலான நெல், உளுந்து, பருத்தி பயிர்கள் சேதமடைந்துள்ளது.சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி வருவாய் மற்றும் வேளாண், தோட்டக்கலை துறை சார்பில் நடந்து வருகிறது. இதில், ரிஷிவந்தியம் குறுவட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் அதிகளவு சேதமடைந்த பரப்பளவு கணக்கெடுப்பு முடிந்து, விவசாயிகளின் பெயர் பட்டியலுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ரிஷிவந்தியம், முட்டியம், மண்டகபாடி, அலியாபாத், பாவந்துார், சாத்தப்புத்துார் ஆகிய கிராமங்களில் சேதமடைந்த நெல், பருத்தி, உளுந்து பயிரினை கள்ளக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் ராஜாமணி பார்வையிட்டு, கணக்கெடுப்பு பணி சரியாக நடந்துள்ளதா என ஆய்வு செய்தார். ஆய்வின்போது, வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், வி.ஏ.ஓ., சைமன்குமார், உதவி வேளாண் அலுவலர் வேலு, உதவி தோட்டக்கலை அலுவலர் பிரபு உட்பட பலர் உடனிருந்தனர்.