சிவகங்கை : கண்டுபட்டி மஞ்சுவிரட்டில் காணாமல் போன காங்கேயம் காளை 5 நாட்களுக்கு பின் கிடைத்தது. காளையை பராமரித்த சிவகங்கை எம்.எஸ்சி., பட்டதாரி நந்தினி கண்ணீருடன் அக்காளையை வரவேற்றார்.
சிவகங்கை டி.புதுாரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மகன் அருணேஷ்வரன். 5 ஆண்டிற்கு முன் காங்கேயத்தில் இருந்து கன்றுகுட்டியை வாங்கி வந்து வளர்த்தார். தற்போது இக்காளை கம்பீரமாக வளர்ந்து மாவட்ட அளவில் நடக்கும் மஞ்சுவிரட்டுகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்துள்ளன.இக்காளையை அருணேஸ்வரன் சகோதரி எம்.எஸ்சி., பட்டதாரியானநந்தினி வளர்த்தார்.இந்த காளை ஜன.,18 அன்று கண்டுபட்டியில் நடந்த மஞ்சுவிரட்டில் பங்கேற்றது. களத்தில் இறங்கியதும் இக்காளையை கண்டு மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
அன்றைய தினம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் சென்றது. அப்போது காளையை அழைத்து சென்ற அருணேஸ்வரன் பல இடங்களில் தேடியும் காணவில்லை. காளையை பராமரித்த நந்தினி மனக்கவலையுடன் இருந்தார்.பாகனேரி அருகே நடராஜபுரம் காட்டிற்குள்இக்காளை நிற்பதாக தகவல் கிடைத்துள்ளது.5 நாட்களுக்கு பின் ஜன., 22 அன்று மாலை அக்காளையை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர். மீண்டு வந்த காளையை பார்த்த நிலையில் நந்தினி, காளையை தழுவியபடி கண்ணீர் விட்டார்.