புதுச்சேரி : புதுச்சேரி காங்., கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது.
மாநில காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி காங்., கட்சியின் விரிவுப்படுத்தப்பட்ட செயற்குழு கூட்டம் காங்., அலுவலகத்தில் இன்று (24ம் தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது. முதல்வர், அமைச்சர்கள், நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை, தேர்தல் பிரசார யுக்திகள், அனைத்து தொகுதிகளிலும் தெருமுனை பிரசாரத்தை துவக்குவது, பூத் கமிட்டி அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. புதுச்சேரிக்கு வருகை தர உள்ள ராகுலுக்கு வரவேற்பு அளிப்பது, பிரசார ஏற்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
கிரண்பேடியை மாற்றக் கோரி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வரும் 26ம் தேதி கையெழுத்து இயக்கம், பிப்ரவரி 5ம் தேதி உண்ணாவிரதம், 16ம் தேதி மாநிலம் தழுவிய கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவது குறித்தும் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.