புதுச்சேரி : அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு தர முடியாத சூழ்நிலையை கவர்னரும், மத்திய அரசும் ஏற்படுத்தியதாக முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
அவர் அளித்த பேட்டி:தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத இடங்கள் வழங்க கடந்த ஆண்டு மார்ச் 23ம், அமைச்சரவை முடிவெடுத்து கவர்னருக்கு கோப்பு அனுப்பட்டது. தமிழகம் மற்றும் கேரளாவில் மருத்துவ படிப்பில், தனியார் கல்லுாரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு தரப்படுகிறது. மத்திய அரசுதாமதம் செய்து, புதுச்சேரி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தர முட்டு கட்டை போட்டுள்ளது.இதற்கு முழு பொறுப்பு கவர்னர் கிரண்பேடி, மத்திய அரசும் ஏற்க வேண்டும்.அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீட்டு கோப்பிற்கும், மத்திய அரசுக்கு அனுப்பி கவர்னர் முட்டுக்கட்டை போட்டார்.
உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.மருத்துவ படிப்பில் பிராந்திய ஒதுக்கீடு வழங்கியதை கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க முடியாது என, மத்திய அரசு குழப்புகிறது.அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தர முடியாத சூழ்நிலையை மத்திய அரசும், கவர்னரும் உருவாக்கி உள்ளனர். இடஒதுக்கீட்டால் அரசு பள்ளியில் படித்த 120 பேருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். குடியரசு தின விழா நெருங்குவதால், குடியரசு தலைவரை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்க கூடாது என மத்திய மின் துறை அமைச்சரிடம் தெரிவித்தோம்.
ஆய்வு செய்ய குழு அனுப்பி வைப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.,வில் குற்றவாளிகளை சேர்த்து வருகின்றனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.