திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதனால், ரோடுகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன.ரோடுகளில் மண் படிந்து, புழுதி கிளம்புகிறது. வாகனங்கள் கிளப்பும் புழுதியை சுவாசித்தப்படி கடைகள் மற்றும் அலுவலகத்தில் உள்ளவர்கள், பணிகளை மேற்கொள்கின்றனர். கொரோனா பரவலால், 40 சதவீத மக்கள், முக கவசம் அணிவதால், அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து தப்பித்து வருகின்றனர்.அரசு மருத்துவ கல்லுாரி 'டீன்' வள்ளி கூறுகையில், ''புழுதி பறக்கும் ரோடுகளில் வாகனங்கள் செல்வதால் பலருக்கு கண் நோய் வருகிறது. துாசி அதிகமாக பறப்பதால் இருமல், சளி போன்ற நோய்கள் வருகின்றன. முக கவசம் அணிவதால், புழுதியை சுவாசிப்பது தடுக்கப்படும். நோய் பாதிப்பும் தவிர்க்கப்படுகிறது,'' என்றார்.