திருப்பூர்:திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து காங்கயம், வெள்ளகோவில் வழியாக கரூக்கு அரசு பஸ்சில் கட்டணம், 70 ரூபாய். சமீபகாலமாக பஸ்சில் கூடுதலாக, 12 ரூபாய் சேர்த்து, 82 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.பயணிகள் கூறுகையில், 'திருப்பூரில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்களில், திருப்பூர் - கரூர் வழித்தடத்தில் மட்டுமே பயணிக்கு, 82 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புகார் தெரிவித்த பின்பும், போக்குவரத்து அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை,' என்றனர்.இது தொடர்பாக தினமும் பயணிகள் மற்றும் நடத்துனரிடையே பஸ்சில் வாக்குவாதம் நடக்கிறது. ஆனால், அதிகாரிகள் தங்கள் காதுகளில் வாங்கிக் கொள்வதில்லை.போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, 'தற்போது, புது பஸ் ஸ்டாண்டில் புறப்படும் பஸ்கள் பூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல், கூலிபாளையம் வழியாக நல்லுார் செல்கிறது. செல்லும் போதும், திரும்ப வரும் போது, 14 கி.மீ., கூடுதலாக பயணிப்பதால், 12 ரூபாய் கட்டணம் சேர்த்து பயணியிடம் வசூலிக்கப்படுகிறது,' என்றனர்.