'வீட்டுக்கு வீடு வாசல்படி' என்பது பழமொழி. 'வாசலுக்கு வாசல் மிதியடி' என்பது புதுமொழி. 'மிதியடிகளை வீட்டில் இருந்தே தயார் செய்யலாம்' என்கிறார் திருமுருகன்பூண்டியை சேர்ந்த கஜலட்சுமி.விதவிதமான மிதியடிகளை தயாரிப்பதோடு, அவற்றை விற்பதன் மூலம் சிறந்த தொழில்முனைவோராக பலருக்கும் வழிகாட்டி வரும் இவர், நம்மிடம் பகிர்ந்த தகவல்கள்:வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க கால்மிதி தயாரிப்பு சிறந்த வழி. பெண்கள் இந்த கால்மிதி தயாரிப்பில் இறங்குவது எளிமையான முதலீட்டில் வளமான வருமானம் பார்க்கும் நல்ல தொழிலாக இருக்கிறது. பிளாஸ்டிக், நார் பொருட்கள் கொண்டு மிதியடி தயாரிக்க தேவைப்படும் பெரிய இயந்திரம், மூலதனம், துணியில் இருந்து கைவேலைப்பாடுகள் மூலம் தயாரிக்க அவசியமில்லை.திருப்பூரில் பனியன் கம்பெனிகளில் மீதமாகும் துணிகள் லட்சுமி நகர் பகுதியில் மொத்தமாக விற்பனையாகிறது. கிலோவுக்கு, 100 முதல், 150 ரூபாய் வரை கிடைக்கும். இதை பின்னினால் கால்மிதியடி பலவித அளவுகளில் கிடைக்கும்கதவு, கார், ேஷாபா செட், டைனிங் டேபிள் என பலவகைகளில் மிதியடி பயன்படும். இதையே நம் கற்பனை திறனுக்கு ஏற்றவாறு பல டிசைன்களிலும், மாடல்களிலும் வடிவமைத்து நல்ல வருமானத்தை பெறலாம். காட்டன் துணிகளை விட வேஸ்ட் பனியன் துணி கால்மிதி தயாரிப்புக்கு ஏதுவாக இருக்கும். பயன்பாடும் அதிக நாட்களுக்கு வரும். குறைந்தது, 150 முதல் விற்கிறேன். எம்ப்ராய்டரி, பூ வேலைப்பாடு செய்து கலைநயத்தோடு உருவாக்கினால் அதிகவிலை கிடைக்கும்.கடந்த, ஐந்து ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே கிடைக்கும் நேரத்தில் கால்மிதியடி, ஒயர்கூடை போன்ற கைவினைப்பொருட்களை தயாரித்து வருகிறேன். கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு இத்தொழில் ஒரு பெஸ்ட் சாய்ஸ்!