கள்ளக்குறிச்சி : வழிக்காவல் போலீசை தாக்கிவிட்டு தப்பியோடிய கைதியை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் பகுதியில் நடந்த பைக் திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டர்.அதில் கிடைத்த தகவலின் பேரில், சின்னசேலம் தலைமை காவலர்கள் முஸ்தபா, சுப்ரமணி மற்றும் சிவராமன் ஆகியோர் நேற்று, நாமக்கல் கிளை சிறையில் இருந்த கைதிகள் சக்கரவர்த்தி,27; சவுந்தர்ராஜன்,28; ஆகியோரை விசாரிப்பதற்காக, கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.ஆத்துார் பஸ் நிலையம் வந்ததும், கைதி சக்கரவர்த்தி சிறுநீர் கழிக்க செல்வதாக கூறினார்.
அதனையொட்டி, தலைமைக் காவலர் முஸ்தபா, சக்கரவர்த்தியை கழிவறைக்கு அழைத்து சென்றார். அப்போது சக்கரவர்த்தி, தலைமைக்காவலர் முஸ்தபாவை தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.படுகாயமடைந்த முஸ்தபா ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மற்றொரு கைதியான சவுந்தரராஜனை போலீசார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். போலீசை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற கைதி சக்கரவர்த்தியை, தேடி இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான தனிப்படைபோலீசார் ஆத்துார் விரைந்துள்ளனர்.