திருப்பூர்;புதிய வாய்ப்புகளை கண்டறிய வேண்டும்; கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு வர்த்தகத்தை பெருக்க வேண்டும் என்பது, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் ஒவ்வொருவரின் கனவாக உள்ளது. இதற்கு உறுதுணையாக, கண்காட்சிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.வெளிநாடு, உள்நாட்டில் நடைபெறும் கண்காட்சிகளில், ஆடைகளை காட்சிப்படுத்தி, ஆர்டர்களை கைப்பற்ற ஏற்றுமதியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனாவால் தற்போது, நேரடி கண்காட்சி நடத்த முடியாத சூழல் நிலவுகிறது.இதற்கு மாற்றாக, மெய்நிகர் கண்காட்சி நடத்தப்படுகிறது. 'ஆன்லைனில்' நடைபெறும் இந்த கண்காட்சிகளில், '3டி' தொழில்நுட்ப உதவியுடன் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இவற்றில், நிறுவனங்களின் ஆயத்த ஆடைகள், காட்சிப்படுத்தப்படுகிறது.வர்த்தகர்கள், தங்கள் இருப்பிடத்தில் இருந்தவாறே, அரங்குகளை பார்வையிட்டு, வர்த்தக விசாரணை நடத்துகின்றனர்.ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன், வெற்றிகரமாக வெளியேறியுள்ளது. இது, இந்திய ஆடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, புதிய வர்த்தக வாய்ப்புகளை பெற்றுத்தரும் என, கணிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டுக்கான வர்த்தகத்தை வசப்படுத்த ஏதுவாக, 'பியூர் ஆரிஜின் பை ப்யூர் லண்டன்,' என்கிற பெயரில் மெய்நிகர் ஆயத்த ஆடை கண்காட்சி நடைபெற உள்ளது.வரும் பிப்., 23ல் துவங்கி, ஏப்., 1ம் தேதி வரை, தொடர்ந்து, 38 நாட்கள் இந்த கண்காட்சி நடக்கிறது. உலகளாவிய நாட்டு ஆடை உற்பத்தி துறையினர், அனைத்து வகை பேஷன் ஆடை ரகங்களை இடம்பெற செய்ய உள்ளனர்.இதேபோல, அமெரிக்காவின் 'மேஜிக் பேர்' மிகவும் பிரசித்தி பெற்றது. இதில், திருப்பூர் ஏற்றுமதியாளர் ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர். நடப்பு ஆண்டு, இதுவும், மெய்நிகர் கண்காட்சியாகவே நடக்கிறது.வரும் மார்ச் 1ல் துவங்கி, மே 1ம் தேதி வரை, மொத்தம் 62 நாட்கள் நடக்கிறது. மிக முக்கிய சந்தைகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் நடைபெறும் இந்த கண்காட்சிகள், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களின் கனவுகள் மெய்ப்பட, நிச்சயம் கைகொடுக்கும்.செலவு மிகமிக குறைவு என்பதால், சிறு, குறு நிறுவனங்களும், கண்காட்சியில் பங்கேற்க முடியும். இவ்விரு கண்காட்சியில் பங்கேற்க, ஏ.இ.பி.சி., ஏற்பாடு செய்துள்ளது.எனவே, பங்கேற்க விரும்புவோர், https://aepcindia.com/exhibitor-registration/ என்கிற தளத்தில் வருகையை பதிவு செய்யவேண்டும்.விவரங்களுக்கு, 0421 2232634 என்கிற எண்ணில், ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.