திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஓராண்டில், 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 30,578 பேர் பயனடைந்துள்ளனர்.தமிழக சுகாதாரத்துறையில், 18 அவசர கால ஊர்தி திட்டம் பயன்பாட்டில் உள்ளது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், 30 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. விபத்து, நோய் பாதிப்பு, பிரசவம் என, பல்வேறு சேவைகளுக்கு ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படுகிறது.தவிர, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரை, மருத்துவமனைக்கு அழைத்து வருதல், சிகிச்சை பெற்று குணமடைந்தோரை, வீடுகளில் விடுதல் ஆகிய பணிகள், '108' ஆம்புலன்ஸ் வழியாக மேற்கொள்ளப்படுகிறது.அவ்வகையில், மாவட்டத்தில், கடந்தாண்டு, ஆம்புலன்ஸ் சேவை மூலம் 30,578 பேர் பயனடைந்துள்ளனர். அவர்களில், 5,168 பேர் சாலை விபத்தில் இருந்து காப்பற்றப்பட்டுள்ளனர். அதேபோல், 6,240 கர்ப்பிணிகள், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, பிரசவம் மேற்கொள்ளப்பட்டது.மேலும், 3,460 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இத்தகவலை, ஜி.வி.கே., இ.எம்.ஆர்.ஐ., மாவட்ட அலுவலர் உதியநிதி தெரிவித்துள்ளார்.