பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் - தளவானுார் இடையிலான தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் தென்பெண்ணையாற்றில் கடலுார், விழுப்புரம் மாவட்டங்களை இணைக்கும் எனதிரிமங்கலம் - தளவானுார் இடையே, 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது. 14 அடி உயரம், 650 அடி நீளம் கொண்டதாக, இரு மாவட்ட எல்லையிலும் தலா 3 ஷட்டர்களுடன் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. கடந்த மாதம் பெய்த கனமழையால் தடுப் பணையில் தண்ணீர் தேங்கியது.இதன் காரணமாக இரு கரையோரம் உள்ள இரு மாவட்ட பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.
இந்த தடுப்பணை மூலம் தேக்கி வைக்கும் தண்ணீர் கடலுார் மாவட்டத்தில் எனதிரிமங்கலம் வாலாஜா வாய்க்கால் மூலம் கரும்பூர், கொரத்தி, திருத்துறையூர், பூண்டி, கள்ளிப்பட்டு, கண்டரக்கோட்டை, புலவனுார், மேல்குமாரமங்கலம், எல்.என்.புரம், பூங்குணம், கோட்லாம்பாக்கம், பண்டரக்கோட்டை உள்ளிட்ட 14 ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து வந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் தளவானுார், கள்ளிப்பட்டு உள்ளிட்ட 12 கிராமங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் விடப்பட்டது. 14 அடி உயரம் கொள்ளளவு உள்ள இந்த தடுப்பணையில் தற்போது 12 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது.
இந்நிலையில், கடலுார் மாவட்ட எல்லையான எனதிரிமங்கலம் ஆற்றின் கரையோரம் தடுப்பணையின் கீழே உடைப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு முதல் தண்ணீர் வெளியேறி வருகிறது.தகவலறிந்த விழுப்புரம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று காலை 11:00 மணியளவில் ஆய்வு செய்தனர்.அப்போது அவர்கள், தடுப்பணையில் உடைப்பு ஏற்பட வில்லை. தடுப்பணையின் கீழே மண் அரிப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வெளியேறுகிறது என தெரிவித்தனர். பின், உள்ளுர் விவசாயிகள் உதவியு டன், உடைப்பு பகுதியில் களிமண், மணல் மூட்டைகளை போட்டு உடைப்பை மூடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், தண்ணீர் தொடர்ந்து வெளி யேறியதால் மாலை 4:00 மணியளவில், இரு மாவட்ட எல்லையில் உள்ள 6 ஷட்டர்களையும் திறந்து தண்ணீர் முழுவதையும் வெளியேற்றினர். இதனால், விவ சாயிகள் கவலையடைந்துள்ளனர்.