திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், இதுநாள் வரை அவகாசம் வழங்கியும், 11 ஆயிரத்து, 070 பேர், பொங்கல் பரிசு பெறவில்லை.தமிழக அரசு, பொங்கல் பண்டிகையின் போது, 2,500 ரூபாய் ரொக்க பரிசுடன் கூடிய, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியது. திருப்பூர் மாவட்டத்தில், ஏழு லட்சத்து, 48 ஆயிரத்து, 666 பயனாளிகளுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.கடந்த, 4ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை பரிசு வழங்கப்பட்டது. ரேஷன் கடையில், காலை மற்றும் மதியம் என, தலா, 100 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் வரை, 98 சதவீதம் பேருக்கு பரிசு பொருள் வழங்கப்பட்டது.வெளியூர் சென்ற கார்டுதாரர் திரும்பி வந்து, பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளும் வகையில், 25ம் தேதி வரை பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம் என, கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதுநாள் வரை பொங்கல் பரிசு பெறாதவர்கள், நாளை மாலைக்குள் பெற்றுக்கொள்ளலாம் என, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.குடிமைப்பொருள் வழங்கல்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில், 11 ஆயிரத்து, 70 பேர், பொங்கல் பரிசு பெறாமல் உள்ளனர். வெளியூர் சென்றவர்கள், 25ம் தேதி (நாளை) மாலைக்குள், அந்தந்த ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்; அதற்கு பிறகு, பெற முடியாது.பொங்கல் பரிசு பெற விருப்பமில்லாதவர்கள், கடைக்கு செல்ல தேவையில்லை. பண்டிகை முடிந்த பிறகு, சர்வர் வேலை செய்யாமல், பரிசு பொருள் வழங்க இயலவில்லை. தற்போது, சர்வர் தயாராகிவிட்டது; இதுவரை, பரிசு பொருள் பெறாதவர்கள் பெற்று கொள்ளலாம்,' என்றனர்.