கோவை:பராமரிப்பு மானியம் வழங்கப்பட்டுள்ளதால், பள்ளிக்கான செயல்திட்டத்தை தயாரித்து, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம், மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து, அரசுப்பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, குறைந்தபட்சம், 25 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான நிதி, பள்ளி திறக்கும் முன்பே விடுவிக்கப்பட்டதோடு, துாய்மைப்பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது.இத்தொகைக்கு பள்ளியில் மேற்கொள்ளப்படும் செலவினங்கள் குறித்து, பள்ளி மேலாண்மை குழு சார்பில், தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆண்டு இறுதியில், பராமரிப்பு நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், செலவின விபரங்களை பட்டியலிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.இதை தணிக்கை செய்து, தடையின்மை சான்று பெற்றால் தான், அடுத்த கல்வியாண்டில் பராமரிப்பு நிதி பெற முடியும். இதற்காக, பள்ளி செயல்திட்டம் தயாரிக்க, தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.