திருப்பூர்:நாட்டில் முதல் முறையாக, தமிழக மின்வாரியத்தில், ஜி.ஐ.எஸ்., என்ற புவியியல் தகவல் அமைப்பு பணி செயல்படுத்தப்படவுள்ளது.
தமிழக மின் வாரியம், ஜி.ஐ.எஸ்., என்ற புவியியல் தகவல் அமைப்பு அடிப்படையில், அசையா சொத்துக்கள் விவர வரைபடம் மற்றும் மூன்று கோடி நுகர்வோர் விவரங்களை சேகரித்துள்ளது. அந்த வரைபடம், 'சாப்ட்வேர்' வடிவில், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.இதில், ஒவ்வொரு பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மின் வழித்தடம், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட அனைத்து மின் வினியோக சாதனங்களும் இடம்பெற்றுள்ளன.
மின் இணைப்பு பெறும் நுகர்வோர் எண்ணிக்கை, யார் எந்த பிரிவில் உள்ளனர் போன்ற விவரங்களும் இருக்கும்.மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'நாட்டில் முதல் முறையாக, தமிழக மின்வாரியத்தில் மட்டுமே ஜி.ஐ.எஸ்., திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைப்பு பணிக்காக, மின்வினியோக சாதனங்களில் நவீன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டும் வருகின்றன.
மின் வினியோகம், மின் அழுத்த பிரச்னை, மின்தடை ஏற்படும் இடங்கள் உள்ளிட்ட விவரங்களை நுகர்வோரும் தெரிந்து கொள்ள முடியும். உடனுக்குடன் பிரச்னைகளைக் கண்டறிந்து தீர்வு காண முடியும்' என்றனர்.