திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே டிராக்டரை திருடிய வாலிபரை, தனிப்படை போலீசார் 48 மணி நேரத்தில் கைது செய்தனர்.
அவரிடமிருந்து இரண்டு டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த சடைக்கட்டி, புத்தகரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி, 58; இவருக்கு சொந்தமான மகேந்திரா டிராக்டர், அதில் பயன்படுத்தப்படும் ரோட்டவேட்டரை, 21ம் தேதி இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, டி.எஸ்.பி., ராஜூ மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கிடைத்த தகவலின் பேரில், நேற்று காலை ஐ.சித்தாமூரில் ரோட்டவேட்டர் பொருத்திய சுராஜ் டிராக்டரை ஓட்டி வந்த கொழுந்திராம்பட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மணிகண்டன்,28; என்பவரை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர் ஏற்கனவே பைக் திருட்டு வழக்கில் சிறை சென்று வந்தவர் என்பதும், சடைக்கட்டி, முரளியின் டிராக்டரை திருடிச் சென்று சங்கராபுரம் அடுத்த மூக்கனுாரில் மறைவாக நிறுத்திவிட்டு, அதில் இருந்த ரோட்டவேட்டரை, ஏற்கனவே வளவனுாரில் திருடி வைத்திருந்த சுராஜ் டிராக்டரில் பொருத்திக் கொண்டு வந்தது தெரிய வந்தது.அதையடுத்து, மணிகண்டனை கைது செய்த போலீசார், அவர் திருடி வைத்திருந்த இரண்டு டிராக்டர்கள் மற்றும் ரோட்டவேட்டரை பறிமுதல் செய்தனர்.