நள்ளிரவில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை மயிலம் அருகே முகமூடி ஆசாமிகள் துணிகரம் | கடலூர் செய்திகள் | Dinamalar
நள்ளிரவில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை மயிலம் அருகே முகமூடி ஆசாமிகள் துணிகரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
02:42

மயிலம் : மயிலம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி, 15 சவரன் நகை மற்றும் ரூ.65 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற முகமூடி ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.



விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த சின்னநெற்குணத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்,57; அஞ்சலக ஊழியர். நேற்று முன்தினம் நள்ளிரவில், இவரது வீட்டின் பின் கதவை உடைத்து, முகமூடி ஆசாமிகள் நான்கு பேர் உள்ளே புகுந்தனர்.சத்தம் கேட்டு எழுந்த வெங்கடேசன், கொள்ளையரை பார்த்து கூச்சலிட முயன்றார். முகமூடி ஆசாமிகள் கத்தியை காட்டி, கூச்சலிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.பின்னர், வெங்கடேசன் குடும்பத்தினர் அணிந்திருந்த மற்றும் பீரோவில் இருந்து 12 சவரன் நகை, ரொக்கப் பணம் ரூ.60 ஆயிரத்தை கொள்ளை அடித்தனர்.



நான்கு மொபைல் போன்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.தொடர்ந்து, அதே பகுதியில் நீலமேகம் வீட்டின் முன் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த நான்கு பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர்கள் அணிந்திருந்த 3 சவரன் நகைகள், பீரோவில் இருந்த ரொக்கப்பணம் ரூ.5,000 மற்றும் மூன்று மொபைல் போன்களை கொள்ளை அடித்தனர். பின்னர் அருகில் உள்ள குணசேகரன் என்பவரது பண்ணை வீட்டில் நுழைந்தனர். வீட்டில் யாரும் இல்லாததால், வெங்கடேசன் மற்றும் நீலமேகம் வீடுகளில் கொள்ளையடித்த மொபைல் போன்களை வீசி விட்டு தப்பிச் சென்றனர்.



தகவலறிந்த எஸ்.பி., ராதாகிருஷ்ணன் மற்றும் மயிலம் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடங்களை பார்வையிட்டனர். மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். சம்பவம் குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிந்து, முகமூடி கொள்ளையரை தேடி வருகின்றனர். அடுத்தடுத்து மூன்று வீடுகளில் முகமூடி கொள் ளையர்கள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் கிராம மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X