ஒட்டன்சத்திரம் : தொடர் மழை காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் விலையும் குறைந்துள்ளதால் மக்காச்சோள விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தாண்டு பெய்த மழையால் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் ஆர்வத்துடன் மக்காச்சோளத்தை பயிரிட்டனர். பல இடங்களில் படைப்புழு தாக்குதல் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டது. நோய் தாக்குதலில் இருந்து தப்பியதால் நம்பிக்கையுடன் இருந்த விவசாயிகளுக்கு, தொடர்மழை ஏமாற்றத்தை அளித்துள்ளது.அறுவடை செய்ய முடியாதபடி அடுத்தடுத்து பெய்த மழையால் நன்கு விளைந்த கதிர்கள் முளைவிடத் தொடங்கின. அதேநேரம் மழை நின்றதும் அறுவடை பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்தாண்டு ஒரு கிலோ ரூ.20 க்கு விற்ற மக்காச்சோளம் தற்போது ரூ.14 க்கு தான் விற்கிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.சாமியார்புதுார் விவசாயி பொன்ராம் கூறுகையில், ''2 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டேன். ஏக்கருக்கு 35 மூடை கிடைக்க வேண்டும். மழையால் 10 மூடை கிடைப்பதே சிரமம். அதேசமயம் விலையும் கடந்தாண்டை விட கிலோவுக்கு ரூ.6 வரை வீழ்ச்சி அடைந்துள்ளதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கும் சோளத் தட்டைகளை தீவனமாக பயன்படுத்த முடியாதபடி கறுத்துவிட்டது'' என்றார்.