கொரோனா வைரஸ் பாதிப்பால், பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம், பொருளாதாரம் இழந்துள்ளனர். இந்த வைரஸ் உச்சம் தொட்ட நாள் முதல், பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு, இந்த நோய்க்கு தடுப்பூசி எப்போது வரும் என்பதாகதான் இருந்தது. இந்நிலையில், கடந்த 16ம் தேதி முதல் நாடு முழுவதும், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால், தடுப்பூசியால் பக்கவிளைவுகள் வருமோ என்று, மக்கள் அஞ்சி நடுங்க ஆரம்பித்து விட்டனர். தடுப்பூசி செலுத்தி கொண்ட, நம்மூர் டாக்டர்கள் என்ன சொல்கின்றனர்?தடுப்பூசி முதல் நாளே போட்டு கொண்டேன். இதுவரை, உடலில் அரிப்பு, தலைசுற்றல் என எந்த பிரச்னையும் இல்லை. இதுவரை, இம்மருத்துவமனையில், 2,300க்கும் மேற்பட்டோருக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே, மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை. முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின், மக்கள் ஒவ்வொருவரும் சமூக அக்கறையுடன் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட வரும்போது, சாப்பிட்டு விட்டு வருவது நல்லது.- டாக்டர் காளிதாஸ், டீன், கோவை அரசு மருத்துவமனை பல கட்ட ஆய்வுகளுக்கு பின்னர்தான், தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எனவே, தடுப்பூசியை கண்டு எதற்கு பயப்பட வேண்டும். இதுவரை, 790 பேருக்கு இங்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. கர்ப்பிணிகள், சிறுநீரகம் செயலிழப்பு, புற்றுநோய், வயது குறைந்தவர்கள் மட்டும் தற்காலிகமாக தடுப்பூசி செலுத்த வேண்டாம். மற்றபடி, யார் வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.- டாக்டர் நிர்மலா, டீன், இ.எஸ்.ஐ., மருத்துவமனைகொரோனா தடுப்பூசி செலுத்தி, எட்டு நாட்கள் ஆகிறது; எவ்வித பிரச்னையும் இல்லை. எப்போதும், வைரஸால் பரவக்கூடிய வியாதிகளுக்கு தடுப்பூசிகள்தான் நிவாரணம். வாட்ஸ் ஆப்களில் வரும் வீண் வதந்திகளை நம்பி, பயப்பட வேண்டியதில்லை. விஞ்ஞானிகளும், டாக்டர்களும் மக்களின் நண்மைக்காகதான், இந்த மருந்தினை கண்டுபிடித்துள்ளனர். எந்த பக்கவிளைவுகளும் வராது. டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள் என முன்கள பணியாளர்களுக்கு அடுத்தபடியாக, 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.- டாக்டர் பூமா, குழந்தைகள் நலத்துறை தலைவர், கோவை அரசு மருத்துவமனைபழைய கொரோனா முடிந்து விட்டது, புதிய கொரோனாவும் பரவவில்லை என்று அலட்சியமாக நினைக்காமல், தடுப்பூசி செலுத்த ஒவ்வொருவரும் முன் வர வேண்டும். அரசு நன்கு ஆராய்ந்துதான், இந்த தடுப்பூசியை பயன்பாட்டுக்கே கொண்டு வந்துள்ளனர். எனவே பக்கவிளைவுகள் ஏற்படும் என யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. சொல்லப்போனால், குழந்தைகளுக்கு போடும் தடுப்பூசி போன்றதுதான் இதுவும்.- டாக்டர் சாமிநாதன், பொது மருத்துவ துறை தலைவர், கோவை அரசு மருத்துவமனைகொரோனா தடுப்பூசி முதல் நாளே போட்டு கொண்டேன். கொஞ்சம் வலி மட்டும்தான் இருந்ததே தவிர, வேறு எந்த பிரச்னையும் இல்லை. சமூக வலைதளங்களில் ஆதாரமில்லாமல் பகிரப்படும் தகவல்களை, யாரும் நம்ப வேண்டாம். ஒவ்வொரு டாக்டர், நர்ஸ்களும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதையே முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனைவரும் முன் வரவேண்டும்.- டாக்டர் சுகந்தி, குழந்தைகள் நல துறை தலைவர் இ.எஸ்.ஐ.,மருத்துவமனைகோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது. சாதாரண ஊசியை போன்றதுதான் இதுவும். அரசாங்கம் பல கட்ட ஆய்வுகளுக்கு பின்னர்தான், பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. எனவே, இதை பார்த்து அச்சம் கொள்ள தேவையில்லை. முதல் நாளே தடுப்பூசி போட்டுக் கொண்டதை பெருமையாக நினைக்கிறேன்.-டாக்டர் முத்துலட்சுமிஅறுவை சிகிச்சை துறை இணை பேராசிரியர், இ.எஸ்.ஐ.,மருத்துவமனை