கோவை:கோவையில், முதல்வர் பழனிசாமி நேற்று பிரசாரம் செய்த இடங்களில், ரோட்டின் இருபுறமும் பிளக்ஸ் பேனர்கள், ரோட்டை தோண்டி கொடிக்கம்பங்கள் நடப்பட்டிருந்தன. ஆளுயர 'கட்-அவுட்' கலாசாரம் மீண்டும் துளிர்த்துள்ளதால், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.இரு நாள் பயணமாக, கோவை வந்துள்ள முதல்வர் பழனிசாமி, ராஜவீதியில் நேற்று பிரசாரத்தை துவக்கினார்.
அவர் பயணித்த வழித்தடங்களில், ரோட்டின் இருபுறமும் ரோட்டை தோண்டி, உருட்டுக்கட்டைகளை ஊன்றி பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன. மின் கம்பங்களில் வட்ட வடிவிலான பிளக்ஸ்கள் கட்டப்பட்டிருந்தன.செல்வபுரம், கோவைப்புதுார் பகுதியில் புதிதாக போடப்பட்ட ரோட்டில், ஜம்பர்களால் துளையிட்டு, கொடிக்கம்பங்கள் நடப்பட்டிருந்தன. செல்வபுரம் சிவாலயா தியேட்டர் சந்திப்பில், எம்.ஜி.ஆர்., - ஜெ., - இ.பி.எஸ்., -ஓ.பி.எஸ்., - வேலுமணி ஆகியோரது, பிரமாண்டமான 'கட்-அவுட்'டுகள் வைக்கப்பட்டிருந்தன.
இதேபோன்ற 'கட்-அவுட்'டுகள் வடவள்ளியிலும் வைக்கப்பட்டுள்ளன. பாலக்காடு மெயின் ரோட்டில், தனி தனி 'கட்-அவுட்'டுகள் ரோட்டின் ஓரத்தில் வைத்திருந்ததனர். 'கட்-அவுட்'டுகள், பிளக்ஸ் பேனர்கள் வைப்பது, கோர்ட் உத்தரவை மீறிய செயல் என்று நன்கு தெரிந்திருந்தும், ஆளுங்கட்சியினரே வைத்திருந்தது, பொதுமக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.