கோவை;ஜாமினில் வெளிவந்த தனியார் மருத்துவமனை தலைவர், கோவையில் கார் மோதி பலியானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை காந்திபுரத்தில் இயங்கி வந்த எல்லன் மருத்துவமனை உரிமையாளர் ராமசந்திரன், 72. மூன்றாண்டுகளுக்கு முன் மருத்துவமனையை சென்னையை சேர்ந்த டாக்டர் உமாசங்கர், 54 என்பவருக்கு வாடகைக்கு கொடுத்தார்.இதையடுத்து, மருத்துவமனையின் பெயரை, சென்னை மருத்துவமனை என மாற்றி டாக்டர் உமாசங்கர் நடத்தி வந்தார்.
இந்நிலையில், வாடகை பாக்கி, 4.95 கோடி ரூபாயை தராத டாக்டர் உமாசங்கர், மருத்துவமனையை வேறுஒருவருக்கு வாடகைக்கு விட முயன்றதாக ராமச்சந்திரன், கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.வழக்கு பதிந்த போலீசார் டாக்டர் உமாசங்கர் மற்றும் மருத்துவமனை மேலாளர் மருதவாணன் ஆகியோரை, டிச., 4ம் தேதி கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
பின், ஜாமினில் வெளிவந்த டாக்டர் உமாசங்கர் தினமும் கோவை ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார்.இந்நிலையில், நேற்று மதியம் கோவை துடியலுார் கண்ணப்ப நகர் பகுதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்த, அவர் மீது கார் மோதியதில் பலியானார். துடியலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
'விபத்தில் சந்தேகம்'விபத்தில் பலியான டாக்டர் உமாசங்கரின் மகன் தினகரன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், 'டாக்டர் மரணத்தில் சந்தேகம் உள்ளது; உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்' என, கோவை ரூரல் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அவர்களை துடியலுார் போலீஸ் ஸ்டேஷனில் மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டது.
போலீசார் கூறுகையில், 'ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று கையெழுத்திட்ட பின், கண்ணப்பநகர் வந்த உமாசங்கர் அங்குள்ள ஒர்க் ஷாப்பில், தனது காரை சர்வீஸ்க்காக விட்டார். கார் சர்வீஸ்க்கான பணத்தை, அப்பகுதியில் இருந்த வங்கி ஏ.டி.எம்., சென்று எடுத்து விட்டு நடந்து வந்துக் கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த கார், அவர் மீதுமோதியதில் இறந்தார். அவர் மீது மோதிய கார் அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்' என்றனர்.