மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழாவின் கதிரறுப்புத் திருவிழா மண்டகப்படியை நடத்த டிரஸ்ட்டுக்கு அனுமதித்த அறநிலையத்துறை இணை கமிஷனரின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.
சிந்தாமணி கதிரறுப்பு மண்டப குடும்ப டிரஸ்ட் சார்பில், 'கதிரறுப்பு மண்டபம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது. தெப்பத் திருவிழாவின் 11வது நாள் மீனாட்சி அம்மன், சுவாமி மண்டபத்தில் எழுந்தருளுவர். பூஜைகள் நடைபெறும். திருவிழா மண்டகப்படி நடத்த எங்களுக்கு உரிமை உள்ளது. அனுமதிக்க வேண்டும்' என அறநிலையத்துறை இணை கமிஷனரிடம் மனு செய்யப்பட்டது. இதை எற்று, நடப்பாண்டில் மனுதாரர் மண்டகப்படி நடத்த இடைக்கால உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து கோயில் செயல் அலுவலர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: கதிரறுப்ப திருவிழா ஜன.,27ல் நடைபெறும். மண்டகப்படிக்கு சொந்தமான இடத்தை சட்டவிரோதமாக விற்றுள்ளனர். இதனால் மண்டகப்படியை கோயில் நிர்வாகமே ஏற்று நடத்துகிறது. மண்டகப்படியில் உரிமை கோரி டிரஸ்ட் சார்பில் தாக்கல் செய்த பிரதான வழக்கு நிலுவையில் உள்ளது. அது முடிவுக்கு வரும்வரை இடைக்காலமாக மண்டகப்படி நடத்த டிரஸ்ட்டுக்கு அனுமதிக்க இயலாது. இணை கமிஷனரின் உத்தரவு சட்டவிரோதம். அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'மண்டகப்படி நடத்த டிரஸ்ட்டுக்கு அனுமதித்த உத்தரவை ரத்து செய்கிறேன்' என்றார்.