தமிழகம்- கேரளாவை இணைக்கும் சாக்கலுாத்துமெட்டு ரோடு திட்டத்தை செயல்படுத்தக்கோரி தேவாரம் வர்த்தகர்கள் சங்கம், சுற்றுக்கிராம மக்களின் சார்பில் நேற்று கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் நடந்தது. -
சாக்கலுாத்துமெட்டு ரோடு திட்டத்தால் போடி, தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் உள்பட 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எளிதில் கேரளா செல்லலாம். அங்கு நெடுங்கண்டம், உடும்பஞ்சோலை, கட்டப்பனை பகுதியினர் இங்கு வந்து பயன்பெறுவர். ஆனால்தற்போது நெடுங்கண்டத்திற்கு தேவாரத்திலிருந்து 50 கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டும். உடும்பஞ்சோலை செல்வதற்கு 60 கி.மீ., துாரம் ஆகும். ஆனால் தேவாரம் மேட்டுபட்டியிலிருந்து சாக்கலுாத்துமெட்டு வழியாக நெடுங்கண்டத்திற்கு 22 கி.மீ., துாரத்தில் அரைமணி நேரத்தில் சென்று விடலாம். நெடுங்கண்டத்திலிருந்து சாக்கலுாத்துமெட்டு வரை ரோடு உள்ளது. ஆனால் தமிழக பகுதியான டி.மேட்டுப்பட்டி அடிவாரத்திலிருந்து 4 கி.மீ., துாரம் உள்ள சாக்கலுாத்து மெட்டு செல்ல ரோடு இல்லை. ரோடு அமைக்க அடிக்கல் நாட்டி 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் திட்டம் கிடப்பில் உள்ளது. இதனால் இருமாநிலத்தினரும் சிரமப்படுகின்றனர்.
கடையடைப்புதேவாரம் - சாக்கலுாத்துமெட்டு ரோடு திட்டத்தை செயல்படுத்தக்கோரி நேற்று தேவாரத்தில் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் முழு கடையடைப்பும், ஆர்ப்பாட்டமும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் செல்வக்குமார் தலைமையில் நடந்தது. தேவாரம் வர்த்தகர்கள் சங்க தலைவர் வெள்ளைச்சாமி, செயலாளர் அலாவுதீன், பொருளாளர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தனர். நுகர்வோர் பாதுகாப்பு குழு, ஏலக்காய் வியாபாரிகள் சங்கம், காய்கறி கடை உரிமையாளர்கள், விவசாயிகள் சங்கத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர். மருந்தகங்கள் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடியது.