தாம்பரம்: சரக்கு லாரியில் கடத்தப்பட்ட, 1 டன் புகையிலை பொருட்களை, பீர்க்கன்கரணை போலீசார் பறிமுதல் செய்தனர்.வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், மதனபுரம் அருகே, பீர்க்கன்கரணை போலீசார், நேற்று காலை, 5:45 மணியளவில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அவ்வழியாக வந்த, சரக்கு லாரி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில், ஐந்துக்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகள் மற்றும் மூட்டை, மூட்டையாக, வெள்ளை நிற சாக்கு பைகள் இருந்தன.அதை சோதித்த போது, தடை செய்யப்பட்ட, 1,040 கிலோ எடையுள்ள குட்கா உள்ளிட்ட, புகையிலை பொருட்கள் இருந்தன. ஓட்டுனர் தப்பினார்.விசாரணையில், மண்ணிவாக்கம், கே.கே. நகரைச் சேரந்த மணிகண்டன், லாரி உரிமையாளர் என, தெரிந்தது.இவர், குட்கா பொருட்களை கடத்தி வந்து, அதே பகுதியிலுள்ள குடோனில் சேமித்து, தாம்பரம், சேலையூர், படப்பை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கடைகளில், விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தப்பியோடிய லாரி ஓட்டுனர் மற்றும் தலைமறைவாக உள்ள உரிமையாளரை தேடுகின்றனர்.ஓட்டுனர் தப்பியது எப்படி?நேற்று காலை, சரக்கு லாரியை போலீசார் நிறுத்தி, சோதனையிடாமல், ஓட்டுனரிடம் பணம் கேட்டுள்ளனர்.அவர், 'பணம் இல்லை' எனக் கூறியதும், லாரி உரிமையாளரை மொபைல் போனில் தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஓட்டுனர், லாரி சாவியை எடுத்துக் கொண்டு, நடந்தே தப்பியுள்ளார். அதன் பின்னரே, போலீசார் சோதனையிட்டு, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். ஆனால், லாரியை பிடித்தவுடன், ஓட்டுனர் தப்பியதாக, உயரதிகாரிகளிடம் மாற்றி கூறியதாக தெரியவந்துள்ளது.