தாம்பரம்: 'பிரிஞ்சி' சாதத்தில் புழு இருந்ததை அறியாமல் சாப்பிட்ட வாலிபருக்கு, வாந்தி,- தலைசுற்றல் ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரத்தில் உள்ள, எஸ்.ஆர்.கே., சந்திரசேகர் பிரியாணி கடையில், நேற்று காலை, 11:00 மணியளவில், மாந்தோப்பு, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த, நுாருல் அஸ்லம், 23, என்பவர் பிரிஞ்சி சாதம் பார்சல் வாங்கினார்.வீட்டில் உணவு அருந்திக் கொண்டிருக்கும் போது, அதில், புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சற்று நேரத்தில், நுாருல் அஸ்லமிற்கு வாந்தி மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டது.அவர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், புழுக்கள் நிறைந்த உணவு பார்சலை, உணவக ஊழியர்களிடம் காட்டினார்.ஊழியர்கள், வேறு பார்சல் அல்லது பணத்தை திருப்பி தருவதாக கூறினர். சமரசம் அடையாத நுாருல் அஸ்லம், தாம்பரம் நகராட்சி, சுகாதார பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தாம்பரம் உணவு பாதுகாப்பு அலுவலரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தாம்பரத்தில் கலப்பட உணவு, அசுத்தமான உணவு விற்பனை சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், உணவு பாதுகாப்பு துறையினர், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.