ஈரோடு: அரசுப்பள்ளியில் நடந்த மனுநீதி முகாம், பொதுக்கூட்டம் போல் அமைந்ததால், மாணவ, மாணவியரின் வகுப்பு பாதித்தது.
ஈரோடு, குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், தென்னரசு முன்னிலையில், மனு நீதி நாள் முகாம் நேற்று நடந்தது. இதில், 168 மனுக்களை பெற்று, கலெக்டர் கதிரவன் பேசியதாவது: குடும்பத்தில் உழைத்து வருவாய் ஈட்டும் ஆண் மற்றும் பெண்ணுக்காக, அரசு சார்பில் காப்பீடு செய்யப்படுகிறது. வருவாய் ஈட்டுபவர் இறந்தால், முன்பு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான பதிவு, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிகளிலும், இ-சேவை மையங்களிலும் நடக்கிறது. இதுவரை ஈரோடு மாவட்டத்தில், 1.80 லட்சம் பேர் காப்பீடு செய்துள்ளனர். தகுதியானவர்கள் காப்பீடு செய்யலாம். இவ்வாறு அவர் பேசினார். அப்பள்ளி மாணவ, மாணவியர், 154 பேருக்கு இலவச சைக்கிள், ?28 பயனாளி களுக்கு, 13.92 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
வகுப்பு பாதிப்பு: கொரோனா பாதிப்பால், கடந்த, 19ல் தான், பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு பள்ளி திறக்கப்பட்டது. நேற்றுதான் பாடங்களும் தொடங்கின. இதை உணர்ந்த கலெக்டர் கதிரவன், ''வகுப்பு நடப்பதற்கு இடையூறு இருக்கும். எனவே, குறைவாக பேசுகிறேன். கோரிக்கைகளை என்னிடம் கூறாமல், மனுவாக வழங்குங்கள்,'' என்றார். ஆனால், மற்றவர்கள் பொதுக்கூட்டம் போல பேசியதால், காலை, 9:30 மணி முதல், 1:00 மணி வரை வகுப்பு முற்றிலும் பாதித்தது.