சேலம்: தமிழகத்தில், கரும்பு விவசாயிகளுக்கு, பல கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்யாமல், நிலுவை வைத்திருப்பதாக, தர்ணா போராட்டத்தில், சி.ஐ.டி.யு., தெரிவித்துள்ளது.
சேலம், நாட்டாண்மை கழக கட்டடம் முன், அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டியக்கம் சார்பில், தர்ணா போராட்டம், நேற்று நடந்தது. மாவட்ட தொ.மு.ச., தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். விவசாயி ராஜேந்திரன், 52, மொட்டை அடித்து, அரை நிர்வாண கோலத்தில் பங்கேற்றார். அதில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர்.
சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத்தலைவர் தியாக ராஜன் கூறியதாவது: மத்திய அரசு, மூன்று வேளாண் சட்டங்களை உடனே திரும்ப பெற வேண்டும். அதை அமல்படுத்தினால், ரேஷன் கடைகள் இருக்காது. முதல்கட்டமாக, நகர்புற விவசாயிகள் பாதிக்கப்படுவர். தமிழகத்தில், அறுவடை செய்யப்பட்ட நெல்லுக்கு, உரிய விலையின்மை, அடுத்து புழு, பூச்சிகளால் நாசம், பின், வறட்சியால் பாதிப்பு. இதுதான், இன்றைய விவசாயிகளின் நிலைமை. கரும்பு விவசாயிகளுக்கு, 8,000 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யாமல், ஏழாண்டுக்கு மேலாக, நிலுவையில் உள்ளது. வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, வரும், 26ல் டிராக்டர் ஊர்வலம் நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.