மேட்டூர்: மான் கறியை கூறு போட்டு விற்க முயன்ற மூவரை, வனத்துறையினர் கைது செய்தனர். மேட்டூர் வனச்சரக அலுவலர் பிரகாஷ் தலைமையில் வனத்துறையினர், நேற்று காலை, கொளத்தூர் வனத்துறை சோதனைச்சாவடியில் ஆய்வு செய்தனர். அப்போது, கொளத்தூரில் இருந்து, மேட்டூர் நோக்கி, டி.வி.எஸ்., மொபட்டில், ஒரு மூட்டையுடன், மாசிலாபாளையம், மாதேஸ், 28, காரைக்காடு, ஆணைகவுண்டன் கொட்டாய் சங்கர், 38, சேலம், மல்லூர் வடிவேலு, 23, ஆகியோர் வந்தனர். மூட்டையை சோதனை செய்தபோது, 15 பொட்டலங்களில் மான்கறி இருந்தது. விசாரணையில், தமிழகம் - கர்நாடகா எல்லையில், மர்மநபர்கள் வைத்த சுருக்கில் சிக்கி இறந்த புள்ளிமானை வெட்டி, கறியை கூறுபோட்டு விற்பனைக்கு எடுத்து வந்தது தெரிந்தது. மூவரையும், வனத்துறையினர் கைது செய்து, கறியை பறிமுதல் செய்தனர். அத்துடன், மூவருக்கும் தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.