ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை சேர்ந்த, முருகன் மகன் சக்கரவர்த்தி, 22. காரிப்பட்டி, பெரிய கவுண்டாபுரத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன், 25. இவர்கள் மீது, சேலம், நாமக்கல், சின்னசேலம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷனில், வாகன திருட்டு வழக்குகள் உள்ளன. சில வாரங்களுக்கு முன், இருவரையும், நாமக்கல் மாவட்ட போலீசார் கைது செய்தனர். அவர்களை, சின்னசேலம் போலீசார், காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றத்தில் மனு செய்தனர். நேற்று, நாமக்கல் சிறையில் இருந்த இருவரையும், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணை நடத்த, எஸ்.எஸ்.ஐ., சுப்ரமணி, ஏட்டுகள் முகமதுமுஸ்தபா, சிவராமன் ஆகியோர் அழைத்துவந்தனர். மாலை, 5:00 மணிக்கு, ஆத்தூர், புது பஸ் ஸ்டாண்ட் வந்தனர். அங்கு, சக்கரவர்த்தி தப்பி ஓட முயன்றார். அவரை, முகமதுமுஸ்தபா விரட்டிப்பிடித்தார். ஆனால், அவரது வலது கையை முறித்து, தள்ளிவிட்டு தப்பிவிட்டார். இக்காட்சி, அங்குள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. காயமடைந்த முகமதுமுஸ்தபா, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றொரு கைதி சவுந்தரராஜனை, ஆத்தூர் டவுன் போலீசில் ஆஜர்படுத்தி, மீண்டும் கள்ளக்குறிச்சிக்கு அழைத்துச்சென்றனர். ஆத்தூர் டி.எஸ்.பி., இம்மானுவேல்ஞானசேகர் தலைமையில், இரு தனிப்படையினர், தப்பிய கைதியை தேடுகின்றனர்.