பாலக்கோடு: பாலக்கோடு, தக்காளி மார்க்கெட் அருகே, சாலையில் பாய்ந்தோடும் சாக்கடை கழிவுநீரால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டுக்கு, தர்மபுரி, ஓசூர், பெங்களூரு, சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து, நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இந்த மார்க்கெட் அருகே, அரசு போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இங்கு, போதிய சாக்கடை கால்வாய் வசதியில்லை. இதனால், பல ஆண்டுகளாக சாக்கடை கழிவுநீர் சாலையில் பாய்ந்து, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகம், சாலையோரத்தில், பள்ளம் அமைத்து, கழிவுநீர் செல்ல வழி செய்யப்பட்டது. ஆனால், போதியளவு அமைக்காததால், அடிக்கடி இதிலிருந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, மக்களின் நலன்கருதி, இங்கு முறையான சாக்கடை கால்வாய் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.