தொப்பூர்: கர்நாடகாவிலிருந்து, சிவகாசிக்கு தக்காளி ஏற்றிய லாரி நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக சென்றது. லாரியை சிவகாசியை சேர்ந்த பாலசுந்தரம், 35, என்பவர் ஓட்டினார். தொப்பூர் கணவாய், இரட்டை பாலத்தில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்ற வேல்வேகன், பிக்அப் வேன், இன்னோவா கார் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. அப்போது, பின்னால் வெள்ளக்கல்லில் இருந்து, சேலத்துக்கு தக்காளி ஏற்றி வந்த மினிலாரி, சாலையில் கவிழ்ந்திருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில், அனைவரும் லேசான காயத்துடன் தப்பினர். தகவலின்படி வந்த தொப்பூர் போலீசார், விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.