ஓசூர்: அலேசீபத்தில், 400 எருதுகள் பங்கேற்ற எருது விடும் விழாவில், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஓசூர் அடுத்த அலேசீபத்தில், மாவட்ட நிர்வாக அனுமதியுடன், பொங்கலையொட்டி, நேற்று காலை எருது விடும் விழா நடத்தப்பட்டது. சூளகிரி, ராயக்கோட்டை, வேப்பனஹள்ளி, தளி மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து, 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அலங்கரிக்கப்பட்ட காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டனர். சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த தட்டிகளை இளைஞர்கள் எடுத்தனர். அப்போது, 15க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களுக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால், உத்தனப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.