கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு, 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிருஷ்ணகிரி, வட்டார போக்குவரத்துத்துறை சார்பில், 32வது சாலை பாதுகாப்பு விழா வரும், பிப்.,17 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்துத்துறை சார்பில், இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கிய பேரணியை, ஏ.டி.எஸ்.பி., ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தார். பெண் காவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், போலீசார், வாகன விற்பனை நிலையத்தினர், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் என, 300க்கும் மேற்பட்டோர், ஹெல்மெட் அணிந்து பேரணியாக சென்றனர். லண்டன்பேட்டை, பெங்களூரு சாலை, 5 ரோடு ரவுண்டானா, சென்னை சாலை வழியாக சென்ற பேரணி, கே.ஆர்.சி., திருமண மண்டபத்தை சென்றடைந்தது. அங்கு நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஹெல்மெட், 'சீட் பெல்ட்' அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், விபத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால், விபத்தில் இறந்தவர் மற்றும் ஊனமுற்றவர்களின் குடும்ப நிலை குறித்தும் விளக்கி கூறப்பட்டது. கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., சரவணன், வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், டவுன் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், அன்புசெழியன் உட்பட பலர் பங்கேற்றனர்.